மனைவியை அடித்துத் துன்புறுத்தி உடலுறவு கொண்ட கணவன்!

பாலியல் துன்புறுத்துல் குறித்து எகிப்திய பெண்கள் தங்கள் மெளனத்தைக் கலைக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அப்படி திருமணத்துக்குப் பிறகு பெண்களின் விருப்பமின்றி உடலுறவு வைத்துக் கொள்ளும் Marital Rape குறித்து தற்போது குரல் எழுப்பத் தொடங்கி இருக்கிறார்கள். இது இப்போது வரை ஒரு கண்டுகொள்ளப்படாத விஷயமாக இருக்கிறது.

குறிப்பு: இந்த கட்டுரையில் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்ட காட்சிகள் விவரிக்கப்பட்டு இருக்கின்றன.

34 வயதான சஃபாவ திருமணம் நடந்த அன்று இரவே, அவரது கணவரால் வன்புணரப்பட்டார். அதில் அவருக்கு தொடைப் பகுதியிலும், மணிக்கட்டிலும், வாய் பகுதியிலும் காயம் ஏற்பட்டது.

“எனக்கு அப்போது மாதவிடாய். நான் உடலுறவுக்கு அன்று இரவு தயாராகவில்லை” என்கிறார் சஃபா.

“என் கணவரோ, நான் அவரோடு ஒரு நெருக்கமாக உடலுறவு கொள்ளாமல் தவிர்ப்பதாகக் கருதினார். அவர் என்னை அடித்தார், கையில் விலங்கிட்டார், என் குரல்வளையை நெரித்தார், என்னை வன்புணர்ந்தார்”.

இத்தனை நடந்த பிறகும், சமூக விழுமியங்களைக் கருதி சஃபா தன் கணவருக்கு எதிராக இது குறித்து காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவில்லை.

ஆனால் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு மாற்றம் வந்தது. ´நியூட்டன்ஸ் க்ராடில்´ என்கிற தொலைக்காட்சித் தொடரில், ஒரு கணவர், தன் மனைவியைக் கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது போல் ஒரு காட்சி இருந்தது.

இது பல பெண்களின் கொடூர நினைவுகளை நினைவுகூர வைத்தது. ஆனால் அக்காட்சிகள், தாங்கள் அனுபவித்த கொடுமைகளை சமூக வலைதளங்களில் வெளிப்படையாக பேசவும், பகிர்ந்து கொள்ளவும் வழிவகுத்தது.

சில வாரங்களுக்குள் நூற்றுக் கணக்கான பெண்கள் தங்களுக்கு நடந்த கொடுமைகளை பகிர்ந்தனர். இதில் ஸ்பீக் அப் என்கிற ஃபேஸ்புக் பக்கத்தில் 700 பெண்கள் பகிர்ந்து கொண்டனர். அவர்களில் 27 வயதான சனாவும் ஒருவர்.

“அவன் என் தேவதூதனாக இருந்தான். திருமணமாகி ஓராண்டு காலத்துக்குள் நான் கர்ப்பமடைந்தேன். என் குழந்தையையும் பெற்றேடுக்கவிருந்தேன்” என அந்த ஃபேஸ்புக் பக்கத்தில் கூறுகிறார்.

“எங்களுக்குள் ஒரு சிறிய சண்டை வந்தது. அவன் என்னை தண்டிக்கத் தீர்மானித்தான்”

“என் சம்மதமின்றி, என்னை வன்புணர்ந்ததால், என் கரு சிதைந்துவிட்டது”

சனா தன் விவகாரத்துக்காக தனியாக போராடினார். தற்போது பிரிந்து வாழ்ந்தாலும், தனக்குப் பிறக்காத குழந்தையை நினைத்து வருந்துகிறார்.

கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது அல்லது காட்டுமிராண்டித்தனமாக உடலுறவு கொள்வது இப்போதும் எகிப்தின் பல பகுதிகளில் காணப்படுகின்றன. குறிப்பாக திருமண இரவன்று இது நடக்கிறது.

ஒரு பெரிய பாடகரின் மனைவி திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வு குறித்து கண்ணீரோடு பேசிய காணொளி இன்ஸ்டாகிராமில் வைரலானது. பல பத்திரிகைகளில் தலைப்புச் செய்திகளானது.அதன் பிறகு இப்படிப்பட்ட திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வு குறித்த விவாதம் அதிகரித்தது.

மேலும், இப்படிப்பட்ட வன்புணர்வுகளை சட்ட அமைப்புகள் குற்றமாகக் கருத வேண்டும் என குரல் எழுப்பினார்.

அப்பாடகரோ அது முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என நிராகரித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 6,500 (திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வு, பாலியல் வன்கொடுமைகள் பாலியல் துன்புறுத்தல், கட்டாயப்படுத்தி உடலுறவு கொள்வது) போன்ற சம்பவங்கள் பதிவாவதாக அரசின் தேசிய பெண்கள் கவுன்சில் கூறுவதாக கடந்த ஜனவரி 2015-ல் வெளியான ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

“எகிப்தில் இருக்கும் பொது கலாச்சாரத்தில், திருமணம் என்பது மனைவி 24/7 மணி நேரமும் உடலுறவுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்கிற பொது புத்தியைத் உண்டாக்குகிறது” என்கிறார் வழக்குரைஞர் மற்றும் பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டு மையத்தின் செயல் இயக்குநர் ரெடா டன்போகி.

பெண்கள் தங்கள் கணவர்களோடு உடலுறவு கொள்ள மறுத்தால், அவர்கள் பாவிகள் ஆவர். அவர்களை தேவதைகள் இரவு முழுக்க சபிக்கும் போன்ற சில மதம் சார்ந்த நம்பிக்கைகள் எகிப்தில் நிலவுகின்றன என்றும் கூறிகிறார் ரெடா.

இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு காணும் நோக்கில், டர் அல் இஃப்தா (Dar al-Ifta) என்கிற எகிப்தின் இஸ்லாமிய ஆலோசனைக் குழு அமைப்பிடம் கேட்ட போது “கணவன் வன்முறையைப் பயன்படுத்தி தன் மனைவி உடன் உடலுறவு கொள்ள விரும்பினால், அவன் (கணவன்) சட்டப்படி பாவியாகிறான். மனைவிக்கு நீதிமன்றம் செல்வதற்கான உரிமை உண்டு. கணவன் மீது புகார் கொடுக்கவும், அவனுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கவும் உரிமை உண்டு” என்கிறது.

பெண்களுக்கான சட்ட விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டு மையம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 200 திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வுகளை ஆவணப்படுத்தி இருக்கிறது. இதில் பெரும்பாலானவைகள் முதலிரவு குறித்த அச்சத்தில் ஏற்படுபவைகள் என்பது குறிப்பிடத்தக்கது. என்கிறார் ரெடா.

எகிப்திய சட்டங்கள் திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வுகளை குற்றமாகக் கருதுவதில்லை. மேலும் அதை நீதிமன்றத்தில் நிரூபிப்பதும் சிரமமாகிறது. ஆனால் உலக சுகாதார அமைப்போ அதை ஒரு பாலியல் வன்முறையாகக் கருதுகிறது.

பெரும்பாலான திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வு வழக்குகளுக்கு, எகிப்தின் 60ஆவது தண்டனைச் சட்டத்தினால் தண்டனை கிடைப்பதில்லை.

“ஷரியா சட்டங்களின் பால் தீர்மானிக்கப்படும் உரிமைக்கு இணங்க, நல்லெண்ண நம்பிக்கையின் அடிப்படையில் செய்யப்படும் காரியங்களுக்கு இந்த தண்டனைச் சட்டங்கள் பொருந்தாது” என்கிறது அச்சட்டம்.

ஆனால் ரெடாவோ, திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வை, பெண்களின் உடலில் காணப்படும் சிராப்புகள், காயங்கள், வாய் பகுதியைச் சுற்றி இருக்கும் காயங்களைக் கொண்டு நிரூபிக்கலாம் என்கிறார்.

எகிப்தில் மாற்றங்கள் மெல்ல வருகின்றன. இப்போதும் பழமைவாத மதிப்புகள் தான் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் திருமணத்துக்குப் பிறகான வன்புணர்வினால் பாதிக்கப்பட்டவர்களின் குரல்கள், மெல்ல கேட்கப்படத் தொடங்கி இருக்கின்றன.

சஃபா மற்றும் சனா ஆகியோரின் பெயர்கள் அவர்களின் பாதுகாப்பு கருதி மாற்றப்பட்டு இருக்கின்றன.

Previous articleயாழில் சாலையோரமாக யாசகர் ஒருவர் சடலமாக மீட்பு!
Next articleசுவிட்சர்லாந்தில் கஞ்சா செடிகளை பெருமளவில் வளர்த்து வந்த 12 பேர் மீது வழக்கு!