மாமாங்கம் பிள்ளையார் ஆலய நிர்வாக குழுவுக்கு 1 இலட்சம் அபராதம் !

மட்டக்களப்பு மாமாங்கம் பிள்ளையார் ஆலயத்தை 14 நாட்கள் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

மேலும் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் ஆலய பிரதம குருக்கள் உள்ளிட்டோரை 14 நாட்கள் தனிமைப்படுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஜ்.வாசுதேவன் தலைமையில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மண்முனை வடக்கு கொரோனா செயலணி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் தொடர்பாக ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாமாங்கம் பிள்ளையார் ஆலயத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆடி அமாவாசை தீர்த்தோற்சவத்தில் சுகாதார வழிகாட்டல்களை மீறி நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்ட நிலையிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த கொரோனா செயலணி கூட்டத்தில் குறித்த உற்சவத்தில் பங்கேற்க 100 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.

உற்சவத்தில் கலந்துகொண்டவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதற்கும் தீர்மானிகக்கப்பட்டுள்ளதாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் எஸ்.வாசுதேவன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆலய நிர்வாகத்தினர் 5 பேர், ஒரு இலட்சம் ரூபாவை அபராதமாக செலுத்த வேண்டும் என மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனுமதியை மீறி ஆலயத்தினுள் அதிகளவான மக்களை உள்வாங்கியமை மற்றும் சுகாதார துறையினரின் வழிகாட்டலை பின்பற்றாமை உள்ளிட்ட இரு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், அவர்களுக்கு எதிராக பொது சுகாதார பரிசோதகர்கள் நேற்று நீதிமன்றத்தில் வழக்குத் தாக்குதல் செய்தனர்.

இந்த வழக்கு, நீதிவான் ஏ.சி.எம். றிஸ்வான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ஒரு குற்றத்துக்கு ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா வீதம் ஒரு இலட்சம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.