கடன்களை திருப்பி செலுத்த இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது – நந்தலால் வீரசிங்க

இலங்கை தனது அனைத்து கடன்களையும் திருப்பிச் செலுத்த உறுதிபூண்டுள்ளதுடன், அடுத்த ஆறு மாதங்களில் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

‘பொருளாதார தொலைநோக்கு 2023’ என்ற தலைப்பிலான நிகழ்வில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாத தொடக்கத்தில் கடன் மறுசீரமைப்புக்கு இந்தியா ஏற்கனவே உறுதியளித்துள்ளது.

இந்த நிலையில், சீனா மற்றும் ஜப்பானிடம் இருந்து விரைவில் உறுதிமொழிகளை எதிர்பார்ப்பதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

IMF உதவி கிடைத்த பிறகு தனியார் கடன் வழங்குபவர்களுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுக்கள் தொடங்கும்.

6 மாதங்களில் இந்த செயல்முறையை முடிக்க எதிர்பார்க்கிறேன் என்றார்.

கடன் மறுசீரமைப்புக்கான காலக்கெடுவைக் குறிப்பிடுவது கடினம்.

எவ்வாறாயினும், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, கடன் நிலைத்தன்மை உறுதி செய்யப்பட்ட பின்னரே இலங்கை நிலையான வளர்ச்சிப் பாதைக்கு திரும்ப முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாரிஸ் கிளப் நாடுகள் உட்பட மற்ற கடன் வழங்குபவர்களுடனான பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் வட்டி விகிதங்களைக் குறைப்பது தொடர்பாக உள்ளூர் வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும், உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நிச்சயமற்றதாகவே உள்ளது.

இதேவேளை, 2023ஆம் ஆண்டில் இலங்கையின் பணவீக்கம் வேகமாக குறையும் எனவும், 2023ஆம் ஆண்டு இறுதிக்குள் ஒற்றை இலக்கத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.