33 ஊடக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம்

அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள உத்தேச இலத்திரனியல் ஒலிபரப்பு அதிகாரசபை சட்டமூலம், நடைமுறைக்கு வருமானால் 33 ஊடக நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளதாக சுதந்திர மக்கள் சபையின் பிரதிநிதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜி.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியிருந்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எந்த நாடும் தனிநபர்கள் மீது தங்கியிருப்பதில்லை. மக்களுக்கு உண்மைகளை மிகவும் விரைவாக கொண்டு செல்வது ஊடக நிறுவனங்களே, ஊடகம் என்பது ஜனநாயக கட்டமைப்பின் ஆணிவேர். இவை அனைத்தும் அரசாங்கத்தால் தடை செய்யப்படுகின்றது.

பல விடயங்களை வெளியில் கொண்டு வந்தது இந்த நாட்டில் உள்ள ஊடகங்களே தவிர வேறு எவராலும் அல்ல. ஊடகங்கள் மக்களுக்கு சேவைகளை செய்தன. எனவே அரசாங்கம் தற்போது ஊடகங்களை மௌனமாக்குவதற்கான கடுமையான சட்டம் கொண்டுவருகின்றது.

இந்த சட்டமூலம் நடைமுறைக்கு வருமானால் முப்பத்தி மூன்று ஊடக நிறுவனங்கள் மூடப்படும். இவை அனைத்தும் அரசின் செயல்பாடுகளே என அவர் தெரிவித்துள்ளார்.