யாழில் மருத்துவ நிர்வாகத்தின் அசமந்த போக்கால் உயிரிழந்த முதியவர்!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பிரதேச மருத்துவமனையிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட முதியவர் மருத்துவமனை நிர்வாகத்தின் அக்கறையீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அச்சுவேலி வடக்கைச் சேர்ந்த குழந்தை கணேஷ் என்ற நபர் நெஞ்சுவலி காரணமாக அச்சுவேலி பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனை மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்தார்.

அச்சுவேலி பிரதேச மருத்துவமனை

அவரை அச்சுவேலியில் இருந்து நோய்காவு வண்டியில் யாழ்ப்பாணத்துக்கு கொண்டு செல்லும் வழியில் கோப்பாய் பகுதியை அண்மித்த சமயத்திலேயே அவரது அனுமதிச் சீட்டை மருத்துவமனையிலேயே தவறவிட்ட விடயம் அதில் இருந்தவர்களுக்கு நினைவுக்கு வந்தது .

இதனால் நோய்காவு வண்டி கோப்பாயில் இருந்து திருப்பி, மீண்டும் அச்சுவேலி பிரதேச மருத்துவமனைக்குச் சென்று அனுமதி சீட்டை எடுத்த பின்னரே யாழ்.போதனா மருத்துவமனைக்கு நோயாளியைக் கொண்டு சென்றனர்.

மருத்துவ அதிகாரி

உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நோயாளியை யாழ். போதனா மருத்துவனைக்கு அழைத்துச் செல்லும் பொழுது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை சரிவரக் கடைப்பிடிக்காமை காரணமாக, நெஞ்சு வலியால் நோயாளி உயிரிழந்துள்ளாரென உறவினர்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

இது தொடர்பில் அச்சுவேலி பிரதேச மருத்துவமனையின் பொறுப்பு மருத்துவ அதிகாரியைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, “இது தொடர்பாக நான் செய்தி மூலம் அறிந்தேன். சம்பவ நேரத்தில் கடமையிலிருந்த மருத்துவர் மற்றும் பணியிலிருந்த ஊழியர்களுடன் இதுவரை நான் பேசவில்லை. அவர்களிடம் முழுமையாக விசாரித்த பின்னரே என்னால் பதிலளிக்க முடியும் என்று தெரிவித்தார்.