பாடசாலை மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தவும் சஜித்

2021, 2022ஆம் ஆண்டு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்துள்ள மாணவர்கள் தங்கள் உயர் கல்வியை தொடர்வதற்கு தேவையான வட்டியில்லா கடன் வசதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

பல்கலைக்கழக வாய்ப்பு கிடைத்துள்ள விருப்பமுள்ள மாணவர்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு சென்று வட்டியில்லா கடன் பெற்றுக்கொண்டு தங்களின் உயர் கல்வி நடவடிக்கையை தொடர நல்லாட்சி அரசாங்க காலத்தில் நடவடிக்கை எடுத்திருந்தோம்.

ஆனால் 2021,2022ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு வாய்ப்பு கிடைத்த 7ஆவது குழுவினருக்கு இந்த கடன் உதவியை பெற்றுக்கொள்ள இதுவரை வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படவில்லை.  என்றாலும் இந்த வேலைத்திட்டம் செயற்படுவதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவிப்பாென்றையும் வெளியிட்டிருந்தது.

2017ஆம் ஆண்டு பட்டக் கல்வியை கற்பிக்கும் 6 நிறுவனங்களுக்கு 26 பட்டப் பாடநெறிகளை கற்பதற்கு வட்டியில்லா கடன் பெற்றுக்கொடுத்தோம். ஒரு கடன் தொகையின் பெறுமதி 8லட்சம் ரூபாவாகும்.

அத்துடன் வட்டியில்லா கடன் வேலைத்திட்டத்துக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ள போதும் அந்த நடவடிக்கை இடம்பெறுவதில்லை.

அதனால் இது தொடர்பில் கவனம் செலுத்தி, மாணவர்களின் எதிர்கால பயணத்துக்கு இந்த சந்தர்ப்பத்தை பெறறுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

அத்துடன் இந்த வேலைத்திட்டத்தை செயற்படுத்த புதிய முறைமை ஒன்றை அமைக்கவேண்டியதில்லை. நல்லாட்சி அரசாங்க காலத்தில் அது அமைக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று இந்த அரசாங்கத்தின் ஆரம்ப பகுதியில் இந்த திட்டம் செயற்படுத்தப்பட்டிருந்தது என்றார்.