கனடா ஒன்றோரியோவில் உண்ணி தொற்று குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

கனடாவின் ஒன்றோரியோ மாகாணத்தில் உண்ணிகளினால் ஏற்படக்கூடிய நோய் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

anaplasmosis, babesiosis மற்றும் Powassan ஆகிய மூன்று வகையான நோய்கள் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

காலநிலை மாற்றத்தின் நேரடி தாக்கமாக இந்த உண்ணி தொற்று நோய் பரவி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய்கள் தொடர்பில் உன்னிப்பாக அவதானிக்கப்பட வேண்டும் என மாகாணத்தின் பிரதம மருத்துவ அதிகாரி டாக்டர் கீரன் மோர் தெரிவித்துள்ளார்.

நோய் பரவுகை அதன் தன்மை உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவிக்கின்றார்.

இந்த வகை உண்ணிகள் கடந்த காலங்களில் குளிர்காலத்தில் அழிந்துவிடும் என்ற போதிலும் தற்பொழுது இவை குளிர்காலத்தை தாக்குப் பிடிக்கக் கூடிய வகையில் உடலில் மாற்றங்களுடன் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

அனபலஸ்மோசீஸ் நோய் ஒரு பாக்டீரியா ஊடாக பரவுகின்றது இந்த உண்ணி கடிப்பதனால் அது மனிதனின் இரத்தத்துடன் கலந்து நோய் தொற்றை பரப்புகின்றது. இந்த உண்ணி மூலம் காய்ச்சல் ஏற்படுவதும் பின்  செங்குருதி துணிக்கைகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதும் இந்த நோயின் தன்மையாகும்.

பேபிசியோஸிஸ் என்ற நோய் மலேரியாவுக்கு ஒத்த ஒரு நோயாகும். இதுவும் ஒருவகை உண்ணியினால் ஏற்படக்கூடிய நோய் என்பதுடன் ரத்தத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதுடன் காய்ச்சலை உருவாக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த வகை நோய்களில் மிகவும் ஆபத்தான வைரஸ் ஆக பொவாஸ்ஸன் என்ற வைரஸ் காணப்படுகிறது.

இந்த வைரஸ் தாக்கத்தின் போது நோய் அறிகுறிகள் பெரிதாக தென்படாது எனவும் காய்ச்சல், தலைவலி, தலைசுற்றல், வாந்தி பலவீனமான நிலை போன்றவற்றை அவதானிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோய் சில நேரங்களில் பக்கவாதத்தையும், கோமா நிலையையும் ஏற்படுத்தக்கூடிய அபாயகரமானது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

நோய் தொற்றுக்கு உள்ளானவர்கள் நீண்ட கால அடிப்படையில் பாதிப்புகளை எதிர் நோக்க நேரிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.