13 ஆவது திருத்தம் நீக்கப்பட்டால் இலங்கையின் எதிர்காலம் என்னவாகும் என்பதை இறைவனே அறிவார்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றின் ஊடாக நீக்கப்பட்டால், 1987ஆம் ஆண்டுக்கு முன்னர் காணப்பட்ட நிலைமை மீண்டும் இலங்கையில் ஏற்படும். எனவே 13 நீக்கப்பட்டால் இலங்கையின் எதிர்காலம் என்னவாகும் என்பதை இறைவனே அறிவார் என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்தார். 

எனவே இனியும் தாமதிக்காது சகல கட்சிகளும் இணைந்து 13 தொடர்பில் ஸ்திரமான ஒரு நிலைப்பாட்டை முன்வைக்க வேண்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் வலியுறுத்தினார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சி தலைவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை (28) ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்றது. 

இதன் போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையில் காணப்பட்ட பதற்ற நிலைமையை தணிப்பதற்காக இந்தியாவின் தலையீட்டுடன் மேற்கொள்ளப்பட்ட இந்து – லங்கா ஒப்பந்தத்தின் மூலம் 13ஆவது திருத்தம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதனை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விவகாரத்தில் முந்தை ஜனாதிபதிகள் எவரும் தலையிடவில்லை என்று தெரிவிக்கப்படுவது கற்பனை கதையாகும்.

ரணசிங்க பிரேமதாச, சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அனைவரும் இவ்விடயத்தில் அவதானம் செலுத்தியிருக்கின்றனர்.

எனினும் அவர்களால் இறுதி தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இது மக்களால் விரும்பப்படாத ஒரு விடயமாகக் காணப்பட்டாலும், ஜனநாயகத்தை ஸ்திரப்படுத்தும் நோக்கில் இதற்கொரு தீர்வு காண்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

அதற்கமைய கடந்த புதனன்று கட்சி தலைவர்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது 13 ஐ நடைமுறைப்படுத்துவதா? அல்லது நீக்குவதா என்பதை நீங்களே தெரிவு செய்யுங்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.

13 ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தினால் அதற்கமைய மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியும். 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு இணங்க முடியாதெனில் , பாராளுமன்றத்தில் பிரேரணையொன்றை முன்வைத்து அதனை நீக்க வேண்டும் என்று ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

ஜனநாயக தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானிக்கும் உரிமையை சகல கட்சிகளுக்கும் வழங்கியுள்ளார்.

எனவே இனியும் தாமதிக்காது எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் சகல கட்சிகளும் ஒருங்கிணைந்த ஸ்திரமான நிலைப்பாடொன்றை அறிவிக்க வேண்டும்.

அதனை விடுத்து 13 பிளஸ் உள்ளிட்ட புதிய கருப்பொருட்களை முன்வைத்தால் , இந்த சிக்கல் தொடர்ந்தும் நீடிக்குமே தவிர இறுதி தீர்வினை எட்டாது என்றார்.

இதன்போது , ஜனாதிபதியின் டில்லி விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி , ’13ஐ முழுமையாக அமுல்படுத்தி தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றும் என்று நம்புகின்றோம்.’ எனத் தெரிவித்திருந்தார். 

அவ்வாறிருக்கையில் பாராளுமன்றத்தினால் 13 நீக்கப்பட்டால் இந்தியாவின் அழுத்தங்களை எதிர்கொள்ள நேருமல்லவா? இதற்கு இந்தியாவுக்கு எவ்வாறு இலங்கை அரசாங்கம் பதிலளிக்கும்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் ,அதை என்னால் கூற முடியாது.

13 நீக்கப்பட்டால் இலங்கையின் எதிர்காலம் என்னவாகும் என்பதை இறைவன் மாத்திரமே அறிவார். அல்லது 1987 கால கட்டங்களில் காணப்பட்ட நிலைமைக்கு இலங்கை மீண்டும் செல்லக்கூடும் எனக் குறிப்பிட்டார்.