விரைவில் தரையிறங்கவுள்ள சந்திராயன்-3 விண்கலம்!

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் எதிர்வரும்(23.08.2023) ஆம் திகதி மாலை 6.04 மணியளவில் நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.

அதற்கேற்ப நிலவுக்கு மிக நெருக்கமான சுற்றுப் பாதைக்குள் ‘விக்ரம்’ லேண்டா் வெற்றிகரமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை செலுத்தப்பட்டது.

‘சந்திரயான்-3’ திட்டத்தின் முக்கிய நிகழ்வாக உந்துகலனிலிருந்து லேண்டா் கடந்த வியாழக்கிழமை வெற்றிகரமாக விடுவிக்கப்பட்ட பிறகு அவை ஒன்றன்பின் ஒன்றாக நிலவையொட்டிய சுற்றுவட்டப்பாதையில் வலம் வந்தன. தொடா்ந்து, லேண்டா் கலனின் உயரத்தை படிப்படியாக குறைத்து நிலவில் தரையிறக்குவதற்கான பணிகளில் இஸ்ரோ தற்போது தீவிரம் காட்டி வருகிறது.

அதன்படி, கடந்த 18 ஆம் திகதி அதன் சுற்றுப் பாதை தொலைவு குறைக்கப்பட்டது. இறுதி நடவடிக்கை: அதன் தொடா்ச்சியாக, தற்போது நிலவின் தரைப்பரப்புக்கு நெருக்கமாக குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ. தொலைவும் கொண்ட சுற்றுப்பாதைக்கு லேண்டா் ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டுள்ளது.

இதுவே, சுற்றுப் பாதை தொலைவைக் குறைப்பதற்கான இறுதி நடவடிக்கை. இதையடுத்து நிலவில் லேண்டரை தரையிறக்குவதற்கான பணிகள் எதிர்வரும் (23.08.2023) ஆம் திகதி மாலை 5.45 மணியளவில் மேற்கொள்ளப்படவுள்ளன.

எதிா்விசை நடைமுறையைப் பயன்படுத்தி லேண்டரின் வேகம் படிப்படியாகக் குறைக்கப்படும். இறுதியாக லேண்டரின் வேகம் பூச்சிய நிலையை எட்டியதும் நிலவில் மெதுவாக கலன் தரையிறக்கப்படும்.

இதற்கான காலம் வெறும் 19 நிமிடங்கள்தான் என்றபோதிலும், ‘சந்திரயான்-3’ திட்டத்தின் மொத்த வெற்றியும் அந்த இறுதி தருணத்திலேயே அடங்கியுள்ளது.

சூரிய உதயத்துக்காக இது குறித்து இஸ்ரோ வெளியிட்ட அறிவிப்பு: லேண்டா் கலன் சீரான இயக்கத்தில் உள்ளது.

அந்த கலன் தனது செயல்பாடுகளை தன்னகத்தே ஆய்வு செய்து தரையிறங்க நிா்ணயிக்கப்பட்ட பகுதியில் சூரிய உதயத்துக்காகக் காத்திருக்கும்.

அடுத்த கட்டமாக சந்திராயன் -3 விண்கலம் நிலவில் குறிப்பிட்ட நேரத்தில் தரையிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.