பெருந்தொகை பணத்துடன் வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த பணிப்பெண்

குவைத் வீட்டுப் பணிப் பெண்ணாகப் பணி புரிந்த இலங்கைப் பெண் ஒருவர், அண்மைக்கால வரலாற்றில் மிகப் பெரிய நிலுவைத் தொகையை பெற்றுக் கொண்டு நாடு திரும்பியுள்ளார்.

அதற்கமைய, அவர் 2,510,400 இலங்கை ரூபா பெறுமதியான 2,400 குவைத் தினார்களைப் பெற்றுக்கொண்டு நேற்று அதிகாலை இலங்கை வந்துள்ளார்.

காலியை சேர்ந்த 46 வயதான ஒரு பிள்ளையின் தாய் ஒருவரே இவ்வாறு நாடு திரும்பியுள்ளார்.

வீட்டின் உரிமையாளர்

2019ஆம் ஆண்டு குவைத்தில் வீட்டிற்கு வீட்டு வேலைக்கு சென்றுள்ளார், மேலும் பாடசாலை ஆசிரியரான வீட்டின் உரிமையாளர், அந்தப் பெண்ணை அடிக்கடி அடித்து துன்புறுத்தியுள்ளார்.

வீட்டின் உரிமையாளர் என்னை அடிப்பார். இதற்கிடையில், எனக்கு மாத சம்பளம் முறையாக வழங்கப்படவில்லை.

இதுபற்றி இலங்கையில் உள்ள அம்மாவிடம் தெரிவித்தேன். அதற்கமைய, 2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி, அம்மா கொழும்புக்கு வந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைமை அலுவலகத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

இது தொடர்பான முறைப்பாடு தொடர்பில் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து இலங்கை தூதரக அதிகாரிகள் குவைத் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த இலங்கை பணிப்பெண் சம்பந்தப்பட்ட வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

அதிகாரிகள் விசாரணை

இந்நிலையில் வீட்டின் உரிமையாளருக்கு தொலைபேசியில் அழைப்பேற்படுத்திய அதிகாரிகள் விசாரணையை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்த வீட்டில் 03 வருடங்கள் 08 மாதங்கள் பணியாற்றிய பெண்ணுக்கு 01 வருடமும் 03 மாதங்களும் சம்பளமே வழங்கப்பட்டது. பின்னர், இந்த முறைப்பாடு இலங்கை தூதரக அதிகாரிகளால் உள்ளூர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இதன்போது நிலுவைத் தொகையை வழங்க ஒரு மாத கால அவகாசம் வழங்குமாறு வீட்டின் உரிமையாரால் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதுவரை, இந்தப் பெண் இலங்கைத் தூதரகத்துடன் இணைந்த தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் ஜனக சமரசேகரவின் தலையீடு மூலம் தனக்கு மிகப் பெரிய நிலுவைத் தொகையை பெற்றுக்கொடுத்தமை குறித்த வீட்டுப் பணிப்பெண் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்நிலையில் பெருந்தொகை சம்பள பணத்துடன் நேற்று காலை 06.10 மணியளவில் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-230 இல் குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார்