அஸ்வெசும திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட இருக்கும் புதிய தீர்மானம்!

அஸ்வெசும நலன்புரி திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அஸ்வெசும வாரத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நவம்பர் 6ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை அஸ்வெசும பயனாளிகளாக தகுதி பெற்ற குடும்பங்கள், இதுவரையில் பலன்களைப் பெறாத குடும்பங்களுடன், தொழில்நுட்பக் கோளாறால் உதவித்தொகை தாமதமாகியுள்ளமை குறித்து கலந்துரையாடப்படவுள்ளது.

மேலும், அஸ்வெசும பயனாளிகளுக்கான ஓகஸ்ட் மாதத்திற்கான கொடுப்பனவு நடவடிக்கைகள் நாளை (01) முதல் ஆரம்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

“தற்போது, ​​ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகளை வழங்கியுள்ளோம். அடுத்ததாக, நிதியமைச்சு, திறைசேரி மூலம் 8.5 பில்லியன் ரூபாவை 1,365,000 பயனாளிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கும். அதன்படி, புதன்கிழமை முதல் பயனாளிகள் அவர்களின் பலன்களைப் பெற முடியும்.” என்றார்.