யாழில் பொலிசாரின் சித்திரவதையால் உயிரிழந்த இளஞனின் மருத்துவ அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்கள்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கடுமையாக அடித்து துன்புறுத்தப்பட்டதால் சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகி உயிரிழந்துள்ளார் என சட்ட மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் இன்று (20) நண்பகல் உடற்கூறு பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் இந்த அறிக்கையிடப்பட்டுள்ளது.

உடற்கூறு பரிசோதனை
மல்லாகம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவில் கட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த சித்தங்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த நாகராசா அலெக்ஸ் (வயது -25) என்பவரே பொலிஸ் சித்திரவதையால் இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை சவ அறையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் உடற்கூறு பரிசோதனையின் பின்னரே உயிழப்புக்கான காரணம் வெளியிடப்பட்டுள்ளது.

அதேவேளை உயிரிழந்த இளஞர் பொலிஸார்ரின் சித்திரவதையினால் இடம்பெற்றதாக உறவினர்கள் குற்றம் சுமத்திய நிலையில், உறவினர்களால் முற்றுகையிடப்படலாம் எனும் அச்சத்தில் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பகுதியில் இன்று நண்பகல் முதல் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் பொலிஸ் நிலைய வீதியில் இரும்பு பாதுகாப்பு வேலிகள் போடப்பட்டு அங்கு விசேட அதிரடிப் படையினரும் ஆயுதங்களுடன் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.