மதுவரித் திணைக்களத்தின் வருமானம் அதிகரிப்பு!

மதுபான போத்தல்களில் ஒட்டப்பட்டுள்ள போலி ஸ்டிக்கர்களை சரிபார்த்து நடவடிக்கை எடுத்ததன் மூலம் மதுவரித் திணைக்களத்தின் மாதாந்த வருமானம் ஒரு பில்லியன் ரூபாவால் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தேசிய பொருளாதார மற்றும் பௌதீக திட்டமிடல் தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவில் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக நாடாளுமன்ற  தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு வழங்கிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக மதுவரித் திணைக்களம், உள்நாட்டு இறைவரி திணைக்களம் மற்றும் இலங்கை சுங்க அதிகாரிகள், அந்த குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டனர்.

மதுவரி சட்டத்தில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதிகரித்துள்ள வருமானத்தை தக்கவைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியமும், எழுமாறான சோதனைகள் தொடர்வதும் மதுபான போத்தல்களில் போலி ஸ்டிக்கர்களை ஒட்டுவதை மேலும் குறைக்கும் என குழு சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

R.A.M.I.S அமைப்பின் தற்போதைய செயற்பாடுகள் குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதுடன், ஏனைய அரச நிறுவனங்களுடன் இந்த அமைப்பை இணைப்பதன் தற்போதைய நிலை குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, தற்போதுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து இந்த தரவு முறைமை எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் செயற்படுத்தப்படும் என உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் தேசிய பொருளாதாரம் மற்றும் பௌதீக திட்டமிடல் துறைசார் மேற்பார்வைக் குழுவிடம் அறிவித்துள்ளனர்.

மேலும், தற்போதுள்ள 07 இலட்சம் வரி ஆவணங்களை எதிர்வரும் காலங்களில் 10 இலட்சம் வரை அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாகவும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.