மூன்று முஸ்லீம்களிடம் மன்னிப்பு கோரிய பொலிசார்!

மூன்று முஸ்லிம்களிடம் இன்று (01) ஹொரவப்பொத்தானை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிங்கள பாணியில் வணக்கம் செலுத்தி மன்னிப்புக் கோரிய சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த ஹொரவப்பொத்தானையைச் சேர்ந்த முஸ்லீம்களிடமே பொலிஸார் இவ்வாரு மன்னிப்பை கோரியுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் கைது செய்யப்பட்டு 6 மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதன் மூலம் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்து செனுல் ஆப்தீன் இர்பான், செனுல் ஆப்தீன் கலிபத்துல்லா மற்றும் சகாரியா ஆகியோர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுக்கள் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் துரைராஜா, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் அச்சலா வெங்கப்புலி ஆகியோர் அடங்கிய அமர்வு அழைக்கப்பட்ட போதே இந்த மன்னிப்பு கோரப்பட்டுள்ளது.

மேலும் மனுதாரர்களிடம் பொலிஸ் அதிகாரிகள் விசாரணை நடத்த மாட்டார்கள் எனவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் உறுதியளித்தார்.