ஒரு வார முடக்கத்தில் பயனில்லை – 3 வாரங்கள் முடக்குமாறு அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்

ஒருவார காலத்திற்கு மாத்திரம் நாட்டை முடக்குவதால் எவ்வித பயனும் ஏற்படாது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எனவே, குறைந்தபட்சம் மூன்று வாரத்திற்காவது நாட்டை முழுமையாக முடக்க வேண்டும் என அவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

யுத்தத்தை வெற்றிக் கொண்டதை போன்று கோவிட் – 19 வைரஸ் தாக்கத்தையும் வெற்றிக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ஜனாதிபதி மற்றும் அவர் தலைமையிலான அரசாங்கம் செயற்பட்டதால் இன்று நாட்டு மக்கள் பாரிய நெருக்கடியினை எதிர் கொண்டுள்ளார்கள்.

அரசாங்கத்தின் மந்தகரமான செயற்பாட்டின் காரணமாக நாட்டு மக்கள் வாழ்வா, சாவா என்ற போராட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்கள். புதுவருட கொவிட் கொத்தணியை தொடர்ந்து வைரஸ் பரவல் தீவிரமடைந்துள்ளது.

ஆகவே நாட்டை முடக்கங்கள் என பல்வேறு தரப்பினர் அரசாங்கத்திடம் வலியுறுத்தினர். சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பேராசிரியர் சுகத் அகம்பொடி கடந்த 5ஆம் திகதி தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில்’ அரசாங்கம் டெல்டா வைரஸ் தாக்கத்திற்கு சவால் விடுத்துள்ளது.

ஆகவே இனி வரும் நாட்களில் ஒரு நாளில் 150 தொடக்கம் 200 வரையிலான உடல்களை தகனம் செய்யும் தகனசாலைகளை இனி தயார்படுத்திக் கொள்ள வேண்டும்’ என அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாட்டை விமர்சித்து நாடு எதிர்கொண்டுள்ள அச்சுறுத்தல் தன்மையினை விளக்கி பதிவேற்றம் செய்திருந்தார். பின்னர் அவர் ஆகஸ்ட் 10 ஆம் திகதி ‘கோவிட் தொற்று தீவிரமடைந்துள்ளது.

ஆகவே நாட்டை மூன்று வாரங்களுக்கு கட்டாயம் முடக்க வேண்டும் இல்லாவிடின் 20 நாட்களுக்குள் 1200 மரணங்கள் பதிவாகும் இவற்றில் 700 மரணங்களை மனித படுகொலையாக கருத வேண்டும்’ என பதிவேற்றம் செய்திருந்தார்.

இவரது கணிப்பு இன்று உண்மையாகி விட்டது. கோவிட் தொற்றினால் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை கடந்த ஒரு வாரத்திலிருந்து அதிகரித்துள்ளதே தவிர குறைவடையவில்லை. நாட்டை முடக்குங்கள் என்று விசேட வைத்திய நிபுணர்கள் வழங்கிய ஆலோசனைக்கு ஜனாதிபதி செவி சாய்க்கவில்லை.

ஆசிய நாடுகளில் கோவிட் தொற்றினால் பதிவாகும் மரணங்களின் தரப்படுத்தலில் இலங்கை முன்னிலை வகிக்கிறது. இரண்டாவதாக மலேசியா உள்ளது. கோவிட் வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த மலேசிய அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது என அந்நாட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள்.

மக்களின் சிந்தனைக்கும், கருத்துக்கும் மதிப்பளித்து அந்நாட்டு பிரதமர் பதவி விலகினார். இதுவே சிறந்த அரச தலைவருக்கு எடுத்துக்காட்டு. இவ்வாறான கலாச்சாரத்தை எமது நாட்டில் காண முடியாது.

கோவிட் – 19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கை தொடர்பில் முரண்பட்ட தரப்படுத்தல் காணப்படுகிறது. அரசாங்கம் வழங்கும் தரவிற்கும், பிரதேச சுகாதார பணிப்பாளர் வழங்கும் தரவிற்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகிறது.

இதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பொறுப்பு கூற வேண்டும். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தினால் தற்போது பௌத்த மத தலைவர்களிடம் சென்று பொலிஸார் முறையிடுகிறார்கள், புலம்புகிறார்கள்.

எதிர்காலத்தில் கோவிட் தொடர்பிலான விசாரணைகளிலும் இவர்கள் இவ்வாறு முறையிட நேரிடும். கோவிட் தாக்கத்தை கருத்திற் கொண்டு நாடு தழுவிய ரீதியில் நாட்டை முடக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் வழமை போன்று இடம் பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு வார காலத்திற்கு மாத்திரம் நாட்டை முடக்குவதால் எவ்வித பயனும் கிடைக்கப் பெறாது. இதனால் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையும், பதிவாகும் மரணங்களின் எண்ணிக்கையும் குறைவடையாது.

சுகாதார வழிமுறைக்கு அமைய மூன்று வார காலத்திற்கு நாட்டை முடக்குங்கள் என்றே சுகாதார தரப்பினர்கள் குறிப்பிட்டார்கள். நாட்டை ஒருபோதும் முடக்க முடியாது என்று ஜனாதிபதி பிடிவாதமாக இருந்தார்.

இவரது தீர்மானத்தை நாட்டு மக்கள் புறக்கணித்து தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள். அரசாங்கத்தை புறக்கணித்து மக்கள் ஊரடங்கு சட்டத்தை சுயமாக பிறப்பித்து ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் தகுந்த பாடம் புகட்டியுள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்