கைக்குண்டு வைத்த சந்தேகநபர் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி செய்தி….!

பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைத்த சந்தேகநபர் மேலும் இரண்டு இடங்களில் கைக்குண்டுகளை வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

இன்று (28-01-2022) வெள்ளிக்கிழமை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாரஹேன்பிட பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையிலும், பெல்லன்வில விகாரை வளாகத்திலும் சந்தேகநபர் வெடிகுண்டு வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, ஜனவரி 11ஆம் திகதி பொரளையில் உள்ள அனைத்து புனிதர்களின் தேவாலய வளாகத்தில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சி.சி.ரி.வி காட்சிகளில் ஒருவர் சிலை மீது வெடிகுண்டு வைப்பது தெரியவந்ததை அடுத்து, சம்பவ இடத்தில் பணிபுரிந்த மூன்று பேர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணையில் வெடிகுண்டை குறித்த இடத்திற்கு கொண்டு வந்தவர் வேறொரு நபர் என தெரியவந்தாக செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்த விடயங்களை முன்வைத்த பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என செயலாளர் மேலும் தெரிவித்தார்.இவர்கள் குறிவைத்த குண்டுகள் வெடித்திருந்தால் உயிரிழப்புகள் மட்டுமின்றி அமைதியான மக்களின் வாழ்க்கையும் சீர்குலைந்திருக்கும் என்று குறிப்பிட்டார்.

இது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்திருக்கக் கூடும் எனவும், குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட பல நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஜகத் அல்விஸ் தெரிவித்தார்.