நாட்டில் இடம்பெற்று வரும் போராட்டம் காரணமாக இராணுவ ஆட்சியும் ஏற்படலாம் – இரா.சாணக்கியன்

பொருளாதாரம் என்பது பூச்சியத்திற்கு வந்துள்ள நிலைதான் தற்போது இலங்கையில் இருக்கின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலை தொடர்பில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மேலும் போராட்டங்கள் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் இராணுவ ஆட்சி ஏற்படக்கூடிய சூழல் ஏற்படும்.

இலங்கை பொருளாதார ரீதியாக கடந்த ஒன்றரை வருடக்காலமாக நெருக்கடிக்குள் இருந்த நிலையில் தற்போது அந்த நிலை தீவிரம் அடைந்துள்ளது.

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பாகவே நாங்கள் கோட்டாபய ராஜபக்ச வரவேண்டாம் என்று கூறினோம். தற்போது சிங்கள மக்கள் அவர் ஜனாதிபதியாக வந்தவுடன் வேண்டாம் என்று கூறுகின்றார்கள்.

இலங்கையில் வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு மற்றும் மலையகம் ஆகிய அனைத்து பிரதேசங்களிலும் அரசுக்கெதிரான போராட்டங்கள் வெடித்திருக்கின்றன.

போராட்டக் களத்தில் இருப்பவர்களின் கோஷம் கோட்டாபய ராஜபக்ச வேண்டாம் என்பதே. கோட்டாபய ராஜபக்ச பதவி விலகாவிட்டால் இந்த போராட்டங்கள் மேலும் அதிகரிக்கும்.

பொதுமக்களுக்கு பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவை கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைத்தால் போராட்டங்கள் குறையும். அந்நிய செலாவணி கிடைக்க வழியில்லை, ஐஎம்எப் இடமிருந்து நிதி வருவதாக தெரியவில்லை. எனவே போராட்டங்கள் மேலும் அதிகரிக்கும்.

நிலைமை தீவிரமடைந்து மக்களின் கருத்துக்கு ஜனாதிபதி செவிகொடுக்கவில்லை என்றால் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். இன்று அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டம் எதிர்காலத்தில் வன்முறையாகக் கூட மாறலாம். அப்போது அதனை கட்டுப்படுத்த இராணுவம் களமிறக்கப்படுமாக இருந்தால் இராணுவ ஆட்சியும் கூட வரலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Previous articleநாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சொத்துக்களை விற்று வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள்
Next articleமிரிஹான போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைத்த நபரை தேடும் பொலிஸார்