பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான புதிய தகவல் !

வருடாந்த பாடசாலை கால அட்டவணையின்படி வழங்கப்படும் பாடசாலை விடுமுறைகளின் எண்ணிக்கையை மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வருடாந்தம் நடத்தப்பட வேண்டிய காலகட்டங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பாடசாலைகளை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கல்விக்கு முன்னுரிமை அளித்து பள்ளிகளை நடத்த சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக இலங்கை போக்குவரத்து சபையினால் மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு இணக்கம் தெரிவித்துள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அடையாளம் காணப்பட்ட பாதைகளில் பல ரயில்களை சேர்ப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.