பொருளாதார நெருக்கடியால் பாடசாலை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு வழங்கிய வாய்ப்பு!

எரிபொருள் நெருக்கடியினால் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பு காரணமாக, தமது வசிப்பிடங்களுக்கு அருகிலுள்ள பாடசாலைகளில் கடமையாற்றுவதற்கு ஆசிரியர்களுக்கு வாய்ப்பளிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதற்கமைய, ஒரே மாகாணத்திலுள்ள தேசிய பாடசாலைக்கு இடையில் மற்றும் தேசிய பாடசாலை மற்றும் மாகாண சபையின் கீழுள்ள பாடசாலைகளுக்கு இடையில் ஆசிரியர்கள் தற்காலிகமாக இடம்மாறி பணியாற்றுவதற்கு அனுமதி வழங்க மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இரண்டு மாகாணங்களுக்கு இடையில், மாகாண சபைக்குட்பட்ட பாடசாலைகளின் ஆசிரியர்கள் தற்காலிமாக இடம்மாறி பணியாற்றுவதற்கான அனுமதி, அந்தந்த மாகாணங்களின் அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளரினது ஒப்புதலுக்கமைய மேற்கொள்ள முடியும்.

மாகாணங்களுக்கு இடையில் தேசிய பாடசாலைகளின் ஆசிரியர்கள் மாறுவதாயின் கல்வியமைச்சின் கல்விப் பணிப்பாளரினால் மேற்கொள்ளுதல் வேண்டும் என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

தற்காலிக இடமாற்றம் கோரும் ஆசிரியர் தான் பணியாற்று பாடசாலையில் மேலதிக ஆசிரியர் என்றால், அவருக்கான பதிலீடு அவசியமன்று. எனினும், குறித்த ஆசிரியர் மேலதிக ஆசிரியர் அல்லாதவராக இருப்பின் அவர் தற்காலிகமாக இடம்பெயருவதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு பதிலீடு ஒருவர் அவசியம் எனவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நடைமுறை டிசம்பர் 31ஆம் திகதி வரை மாத்திரமே அமுலில் இருக்கும் எனவும் கல்வி அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.