ராஜபக்சக்களின் உகண்டா தொழிற்சாலையில் அடிமைகளாய் இருக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் ? : விடுக்கப்பட்ட கோரிக்கை!

உகண்டாவில் உள்ள ராஜபக்ச குடும்பத்தினரின் 11 தொழிற்சாலைகளிலும் எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா? என்பதை உலகவாழ் உறவுகள் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சஙக தலைவி கலாரஞ்சினி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் முலும் குறிப்பிடுகையில்,

13 வருடங்களாக எமது உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்றோம். எமது பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்பதை சொல்லாத இந்த அரசினை நாங்கள்நம்பமாட்டோம்.

இந்த ஆட்சி மாற்றம் எங்களிற்கு பெரிதாக ஒன்றும் செய்யப்போவதில்லை. நாங்கள் சர்வதேசத்தின் ஊடாக நீதியை கேட்டு நிற்கின்றோம். இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை சர்வதேசம் பார்த்துக்கொண்டிருக்கின்றது.

சர்வதேசம் இலங்கை தொடர்பில் அவதானித்து தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வினையும், எமக்கான நீதியையும் பெற்றுத்தர வேண்டும் என கேட்டு நிக்கின்றோம். இதேவேளை உலகலாவிய ரீதியில் வாழ்கின்ற தமிழர்கள், ஒன்றிணைந்து போராட்டங்களை முன்னெடுத்து எமது போராட்டத்திற்கும், அரசியல் தீர்வுக்கும் முன்னின்று உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.

இலங்கை அரசில் குடும்ப ஆட்சியும் இனவழிப்பும் நடந்து அவர்கள் கலைக்கப்பட்டு நாடு கடத்தப்பட்ட பின்னர் எங்களிற்கான தீர்வு சர்வஜன வாக்கெடுப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட வேண்டும் என நாங்கள் எதிர்பார்த்திருந்தோம்.

தற்பொழுது உள்ள ஜனாதிபதி பதவியை இழந்து நிற்கும்போது, எங்களுடைய மண்ணில் வந்து எங்களை சந்தித்தார். உங்களது பிள்ளைகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் எனவும், தற்பொழுது நான் பதவியில் இல்லை. மகிந்தவின் மனைவியின் பிள்ளை காணாமல் ஆக்கப்பட்டிருந்தால் அவர்கள் தேடுவார்கள். அவர்களிற்கான சட்டத்தை பயன்படுத்துவார்கள். நான் இந்த பதவிக்கு வந்தால், நிச்சயமாக பிள்ளைகளை மீட்டுத்தருவேன் என்று கூறியிருந்தார்.

அவரோ அல்லது அவர் சார்ந்த எவருமோ எமக்கு எதுவும் செய்யப்போவதில்லை. இன்று ராஜபக்ச குடும்பத்தினர், நாடுகடத்தப்பட்டு அனாதைகளாக தெருத்தெருவாக திரிகின்ற இந்த வேளையில், உண்மையாக அந்த இனவழிப்பை செய்தவர்களை கைது செய்வதற்கு சர்வதேசம் முன்வரவேண்டும். அவ்வாறு கைது செய்து எமக்கான நீதியை பெற்றுத்தருவார்கள் என்று நம்புகின்றோம்.

உகண்டா எனும் நாட்டிலே, ராஜபக்ச குடும்பத்தினர்11 தொழிற்சாலைகளை அமைத்து அங்கு எமது பிள்ளைகளை சம்பளமில்லாத கூலித்தொழிலாளிகளாக வேலைக்கு வைத்திருக்கலாம் என்று நாங்கள் நம்புகின்றோம். எமது கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளிற்கு என்ன நடந்தது என்று கூற முடியாதவர்கள், எங்களுடைய பிள்ளைகளை கூலித்தொழிலாளர்களாக வைத்திருக்கலாம் என்று நம்புகின்றோம்.

அந்த தொழிற்சாலைகளை நிர்வகிக்கின்றவர் வேலுப்பிள்ளை கனநாதன் என்ற ஒரு தமிழர். அவருடன் உலக நாடுகளில் உள்ள எமது உறவுகள் தொடர்புகொண்டு, எவ்வாறு அந்த தொழிற்சாலைகள் இயங்குகின்றன என்பதையு்ம, அங்கு எமது பிள்ளைகள் இருக்கின்றார்களா என்பதை அறிவதற்கும் முன்வரவேண்டும்.

நிச்சயமாக எமது பிள்ளைகள் கொள்ளப்படவில்லை. அவர்கள் அனைவரும் இந்த குடும்பத்தின் கொத்தடிமைகளாக வாழவைத்துக்கொண்டிருப்பார்கள் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது என அவர் தெரிவித்தார்