உத்தேச மின்சாரக் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள முடியாது ! இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வலியுறுத்து !

உத்தேச மின்சார கட்டண உயர்வு ஏற்றுக்கொள்ள முடியாதது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

இலங்கை மின்சார சபை கடந்த சில வருடங்களில் பாரிய நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கவில்லை எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்று தனது அலுவலகத்தில் 6.9 மில்லியன் மின் பாவனையாளர்களின் கையொப்பமிடப்பட்ட பொது மனுவை ஏற்றுக்கொண்ட ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, குறைந்தது 35 பில்லியன் ரூபா மின்சார சபையிலிருந்து மறைமுகமாக வெளியேறுவதாக தெரிவித்தார்.

35 பில்லியன் ரூபா பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுவதற்கு முக்கிய காரணம் நிர்வாகத்தை துல்லியமாக நிர்வகிக்க முடியாதமையே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மெட்ரிக் டன் நிலக்கரிக்கு $90 விலை வித்தியாசம் உள்ளது. இந்தக் கணக்கீட்டில் பிழை இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இதன் விளைவாக, தவறான பெறுமதிகளின் அடிப்படையில் மின்சாரக் கட்டண உயர்வை நிராகரிப்பதற்கு தமது ஆணைக்குழுவுக்கு முழு அதிகாரம் இருப்பதாகவும் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.