உயிர்மாய்க்க முயன்ற ஈழ அகதிகளில் இருவருக்கு மூன்றாம் நாட்டில் தஞ்சம் கோர பிரிட்டன் அனுமதி!

பிரிட்டிஷ் ஆளுகையின் கீழ் உள்ள இந்து சமுத்திரத் தீவாகிய டியாகோ கார்சியாவில் (Diego Garcia) தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயம் தங்கள் உயிரை மாய்க்க முயன்ற ஈழத் தமிழ் அகதிகள் ஐவருக்கு றுவாண்டா நாட்டின் தலைநகர் கிகாலியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

அவர்களில் ஓர் இளைஞனுக்கும் யுவதிக்கும் – அவர்களைத் திருப்பி அனுப்பும் முடிவைக் கைவிட்டு – விரும்பிய மூன்றாவது நாடு ஒன்றில் இருவரும் அரசியல் தஞ்சம் கோருவதற்கு பிரிட்டிஷ் அதிகாரிகள் அனுமதி வழங்கியிருக்கின்றனர்.

அது எந்த நாடு? ,பிரிட்டனா? எவ்வாறு அவர்கள் தாம் விரும்பிய நாட்டைத் தெரிவு செய்வது? என்பன போன்ற கேள்விகளுக்கு உடனடியாகப் பதில் தெரியவரவில்லை.

ஹம்சிகா கிருஷ்ணமூர்த்தி (வயது -22), அஜித் சசிக்குமார் (வயது -22) ஆகிய இரண்டு பேருக்குமே மூன்றாவது நாடு ஒன்றில் தஞ்சம் கோரும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இருவரும் 2021 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் டியாகோ கார்சியா தீவுக்கு அருகே கடலில் பிரிட்டிஷ் படைகளால் மீட்கப்பட்டிருந்த 89 இலங்கைத் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் குழுவில் அடங்கியிருந்தவர்கள் ஆவர்.

நீண்ட காலமாகத் தீவில் உள்ள தடுப்பு முகாம் ஒன்றில் தங்கவைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வந்த அவர்களில் பெரும்பாலானோர் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு இலங்கைக்குத் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இலங்கை இராணுவத்தினால் சித்திரவதை மற்றும் பாலியல் வன் கொடுமைகளுக்கு உள்ளானவர்கள் என்று கூறிய சிலர், தங்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்பினால் அங்கே தங்களது உயிர்களுக்கு உத்தரவாதம் கிடையாது என்று கூறித் திருப்பி அனுப்பும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க மறுத்துத் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.

டியாகோ கார்சியா தீவில் மூடி அடைக்கப்பட்ட நிலையில் – வெளியுலகத் தொடர்புகள் ஏதுமின்றி-வாழ விடப்பட்டிருந்த அவர்கள் அடிக்கடி உண்ணாவிரதப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தனர். விரக்தியடைந்த நிலையில், மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்களுக்காக பிரிட்டிஷ் மனித உரிமை இயக்கங்களின் சட்டவாளர்கள் சிலர் குரல் கொடுத்தும் வந்தனர்.

அவ்வாறு திருப்பி அனுப்பப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்தவர்களில் ஐந்து பேர் தங்கள் உயிர்களை மாய்க்கும் நோக்குடன் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டனர் என்று தகவல் வெளியாகியிருந்தது.

அவ்வாறு உயிரை மாய்க்க முயன்றவர்களில் ஐவர் சிகிச்சைக்காக இந்த மாத ஆரம்பத்தில் டியாகோ கார்சியாவில் இருந்து ஆபிரிக்க நாடாகிய ருவாண்டாவின் தலைநகரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருந்தனர். அந்த ஐவரில் இருவருக்கே மூன்றாவது நாட்டில் தஞ்சம் கோரும் அனுமதி தற்போது வழங்கப்பட்டுள்ளது.

இருவருக்கும் சிகிச்சை அளித்த றுவாண்டா மருத்துவர்கள் அவர்களது மனோநலம் மற்றும் மீண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடலாம் என்ற ஆபத்து தொடர்பாக அளித்த அறிக்கையின் அடிப்படையிலேயே டியாகோ கார்சியாவின் நிர்வாகத்துக்குப் பொறுப்பான பிரிட்டிஷ் உயர் அதிகாரி இவ்வாறு தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதிகளுக்கான ஐ. நா. தூதரகம் இவர்கள் இருவரும் மூன்றாவது நாடு ஒன்றில் தஞ்சம் கோருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவருக்கும் லண்டனிலேயே புகலிடம் வழங்கப்பட வேண்டும் என்று மனித உரிமைச் சட்டவாளர்கள் கோரியுள்ளனர்.

ஆங்கிலக் கால்வாய் ஊடாகப் படகு மூலமும் வேறு வழிகளிலும் சட்ட விரோதமாக பிரிட்டனுக்குள் நுழைபவர்களை மத்திய ஆபிரிக்க நாடான றுவாண்டாவில் தடுத்து வைத்து அங்கேயே அவர்களது கோரிக்கைகளைப் பரிசீலிப்பது தொடர்பான ஓர் உடன்படிக்கையைக் கடந்த ஆண்டு அந்த நாட்டு அரசுடன் லண்டன் கைச்சாத்திட்டிருந்தது.