நாடாளுமன்றத்தில் பணிப்பெண்களாக கடமையாற்றும் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்!

நாடாளுமன்றத்தில் பணிப்பெண்களாக கடமையாற்றும் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக நாடாளுமன்ற உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சில முக்கிய அதிகாரிகளிடம் இருந்து முறைகேடுகள் நடப்பதாக சமீபகாலமாக உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

இவ்வாறான சம்பவங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் இடம்பெறுவதாகவும் அதற்கு இணங்காவிட்டால் பல்வேறு பழிவாங்கல்களுக்கு உள்ளாக நேரிடும் எனவும் அந்த முறைபாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயத்தில் தங்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நாடாமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சில ஊழியர்கள் தமது வேலைகளை பாதுகாப்பதற்காக இது தொடர்பில் முறைப்பாடு செய்ய பயப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே இது தொடர்பாக நாடாளுமன்ற மகளிர் மன்றத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் செய்ய, அதே ஊழியர்கள் தயாராக உள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.