வடக்கில் பாடசாலை தவணைப் பரீட்சைகள் திட்டமிட்டபடி இன்று நடக்குமா?

வடக்கில் பாடசாலை தவணைப் பரீட்சைகள் திட்டமிட்டபடி இன்று நடக்குமா? இல்லையா? என்பது தொடர்பில் வடமாகாணக் கல்வித் திணைக்களம் இதுவரை தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவிக்கவில்லை.

ஹர்த்தாலால் போக்குவரத்து முடங்கும் என்றும், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆதலால், பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வது சிரமத்துக்குள்ளானதாகவே இருக்கும். தவணைப் பரீட்சைகள் இப்போது இடம்பெறுவதால், பரீட்சை நடக்குமா? நடக்காதா? என்ற தீர்க்கமான முடிவை மாணவர்கள் கல்வித் திணைக்களத்திடம் எதிர்பார்த்திருந்தனர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் கருத்துத் தெரிவித்த வடமாகாணக் கல்விப் பணிப்பாளர் ஜோன் குயின்ரஸ்,’பரீட்சைகளை நடத்துவதா? இல்லையா? என்பதை அந்தந்த கல்வி வலயங்களே தீர்மானிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.

எனினும் கல்வி வலயங்கள் நேற்று தாம் சார்ந்த மாணவர்களுக்கு உறுதியான பதிலை வழங்கவில்லை. அதிபர்களிடமே இறுதி முடிவு என்று. கல்வி வலயங்களும், கல்வி வலயங்களிடம் முடிவு என அதிபர்களும் மாணவர்களைப் பந்தாடிக் கொண்டிருந்தனர்.

இதனால் இன்றைய கல்வி நடவடிக்கை தொடர்பிலும் பரீட்சைகள் தொடர்பிலும் மாணவர்களிடம் குழப்பமான நிலையே இருக்கின்றது.

இதேவேளை, மாணவர்களின் நலன்கருதி பரீட்சைகள் பிற்போடப்படுவதாக பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொது முடக்கத்தை முன்னிட்டு பாடசாலை நடவடிக்கைகள் அனைத்தையும் இன்று  (20) புறக்கணிக்குமாறு தமிழ் கட்சிகள் கூட்டாக அறிவித்துள்ளன.