யாழில் விசேட அதிரடிப் படையினர் நடத்திய தாக்குதல்: ஒருவர் வைத்தியசாலையில்!



யாழில் உள்ள முக்கிய பிரதேசம் ஒன்றில் விசேட அதிரடிப் படையினர் முன்னெடுத்த தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று இரவு (06-02-2022) ஞாயிற்றுக்கிழமை 7.30 மணியளவில் தென்மராட்சி வரணிப் பிரதேசத்தில் இடம்பெற்றது என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, குறித்த பகுதியில் சிவில் உடையில் வந்த விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவரும், கொட்டனால் தாக்கப்பட்டு இன்னொருவருமாக இருவர் காயமடைந்துள்ளனர்.

மேலும் இச்சம்பவத்தின் போது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான நபர் கையில் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் குறித்து தெரியவருவது, சட்டவிரோத மதுபானம் விற்பனை செய்வதாகத் தெரிவித்தே தங்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது எனத் தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த, துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்ட விசேட அதிரடிப் படையினரைக் கைதுசெய்த கொடிகாமம் பொலிஸார், இன்று (07-02-2022) சாவகச்சேரி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் சாவகச்சேரி நீதிமன்ற பதில் நீதவான் ச.இளங்கோவன் அவர்களை பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளார்.