நாட்டின் பொருளாதார சிக்கலால் மூடப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!

நாட்டில் 80 வீதமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் நேற்றைய தினம்(15) மூடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் மொத்தமாக 1190 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காணப்படுவதாகவும் இதில் 250 இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு சொந்தமானவை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

பணம் செலுத்தப்பட்டால் மாத்திரமே எரிபொருள் விநியோகம் செய்வது என்ற நடைமுறையை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் பின்பற்றத் தொடங்கியுள்ளது.

இதனால் பெரும் எண்ணிக்கையிலான எரிபொருள் நிரப்பு நிலையங்களினால் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பெட்ரோல், டீசல் என்பனவற்றை கொள்வனவு செய்ய வேண்டுமாயின் 50 லட்சம் ரூபா வரையில் தேவைப்படும் எனவும் அவ்வாறு பணம் செலுத்தினாலும் உடனடியாக எரிபொருளை பெற்றுக்கொள்ள முடிவதில்லை எனவும் எரிபொருள் விநியோக சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 6000 மெட்ரிக் தொன் பெட்ரோல் மற்றும் 12000 மெட்ரிக் தொன் டீசல் என்பனவே கையிருப்பில் உள்ளதாக பெட்ரோலிய வளக் கூட்டுத்தாபன விற்பனை பிரிவு தெரிவித்துள்ளது.

நாளாந்தம் 5000 மெட்ரிக் தொன் பெட்ரோலும், 6000 மெட்ரிக் தொன் டீசலும், 800 மெட்ரிக் தொன் மண்ணெண்ணையும் தேவைப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய கடனுதவியின் இறுதி தொகுதி எரிபொருள் இன்றைய தினம் இலங்கையை வந்தடையும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇந்தியாவின் கடன் உதவியால் இலங்கைக்கு கிடைத்த கடைசி டீசல்!
Next articleமீண்டும் விலை உயரவுள்ள உணவுப் பொருள் : வெளியான அறிவிப்பு!