அதிகாலை நாட்டை வந்தடைந்த இரு அணியினர்; கொண்டாட்டத்தில் இலங்கை மக்கள்!

ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை கிரிக்கெட் அணியும், ஆசிய சம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணியும் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தன.

ஆசிய வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணி இன்று (13) அதிகாலை 12.50 மணியளவில் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

வலைப்பந்தாட்ட அணியை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க வரவேற்றார்.

இதேவேளை, ஆசிய கிண்ணத்தை 6வது முறையாக கைப்பற்றிய இலங்கை கிரிக்கெட் அணி இன்று அதிகாலை 5 மணியளவில் இலங்கையை வந்தடைந்தது.

இவர்களை வரவேற்கும் முகமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வைபவமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டை வந்தடைந்த வீராங்கனைகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வாகன பேரணியில் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர்.

இன்று காலை 06.30 மணியளவில் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட வாகன பேரணி நீர்கொழும்பு வீதி, பேலியகொட சந்தி, மருதானை சந்தி, டலி வீதி, யூனியன் பிளேஸ், அலெக்சாந்திரா வீதி ஊடாக ஸ்வதந்தி மாவத்தையை சென்றடைந்தது.

சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்துவதற்காக தேசியக் கொடிகளை கைகளில் ஏந்தியவாறு பாதையின் இருபுறங்களிலும் மக்கள் அனைவரும் ஒன்றுகூடுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்தார்.

கட்டுநாயக்கவில் இருந்து ஆரம்பமான வாகனப் பேரணி இலங்கை கிரிக்கெட் மற்றும் வலைப்பந்து சம்மேளன தலைமையகத்தை சென்றடையும்.

Previous articleயாழில் அம்புலன்ஸ் சாரதியை தாக்கியவர் கைது!
Next articleஇலங்கையில் அடுத்த 3 தினங்களுக்கான மின்வெட்டு நேரம் அறிவிப்பு!