அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

தலதா மாளிகை, மத்திய வங்கி மீது குண்டுத்தாக்குதல், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்த போது அவரையும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேக்காவையும் இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சிறைச்சாலைகளில் உள்ளார்கள்.

இவர்களை விடுதலை செய்வதாயின் பாதிக்கப்பட்ட தரப்பினரிடமிருந்து ஆலோசனை கோரப்பட வேண்டும். இவ்விடயம் தொடர்பில் தற்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார். 

நீதி அமைச்சில் நேற்று (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

பாரதூரமான மற்றும் உணர்வுபூர்வமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஒரு சில போராளிகள் சிறைச்சாலையில் உள்ளார்கள்.

16 தமிழ் அரசியல் சிறை கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து அவற்றை விரைவாக நிறைவு செய்யுமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன். 

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பல ஆண்டுகாலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர்கள் மற்றும் விடுதலைப் புலிகள் போராளிகள் சட்டம் மற்றும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகளில் உள்ள 8 விடுதலைப் புலிகள் போராளிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இவர்களின் மேல்முறையீடு நிலுவையில் உள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்புடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் சிறையில் பல ஆண்டுகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 16 பேரின் வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து, அவற்றை நிறைவு செய்யுமாறு நீதிச் சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன்.

சிறைச்சாலைகளில் வயது முதிர்ந்தோர்,நோய் வாய்ப்பட்டோர் ஆகியோரை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகள் ஒவ்வொருவரின் தகவல்களும் தற்போது கோரப்பட்டுள்ளன.