75 ஆவது சுதந்திர விழாவை முன்னிட்டு இலங்கைக்கு இந்தியா கொடுத்த பரிசு!

இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவைகளை வலுப்படுத்துவதற்காக இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கான 50 பேருந்துகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் ஜனாதிபதி அலுவலகத்தில் கையளிக்கப்பட்டுள்ளன.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இந்திய அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க 75வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த பஸ்களை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, அதன் முதல் தொகுதி 75 பேரூந்துகள் அண்மையில் இலங்கை அரசிடம் கையளிக்கப்பட்டது.

மேலும் 40 பேருந்துகளின் பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. இதன்படி இலங்கைக்கு இதுவரை 165 பஸ்கள் வழங்கப்பட்டுள்ளதுடன் 500 பஸ்களை வழங்கும் திட்டம் 2023 மார்ச் மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்பட உள்ளது.

இந்நிகழ்வில் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அஜ்யவன்ன, இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பாராளுமன்ற உறுப்பினர்களான ராதிகா விக்கிரமசிங்க, முத்தித்த பிரசாந்தி மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தலைவர் மற்றும் தேசிய போக்குவரத்து தலைவர் ஆகியோர் கலந்துகொண்டனர்.