மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் நீரோடையில் தவறி விழுந்து பரிதாப மரணம் !

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பிளாந்துறை வில்லுக்குளம் நீரோடையில் வீழ்ந்ததில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக மரணமான சம்பவம் செவ்வாய்கிழமை மாலை (28) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆர்.கே.எம்.பாடசாலை வீதி கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த ரீ.கவிசாந் என்பவரே இவ்விபத்தில் பலியானவராவார்.

சம்பவ தினத்தன்று கல்முனை பிரதேசத்தில் இருந்து தனது சொந்த வேலையின் பொருட்டு தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை நோக்கி சென்று பின்னர் தங்களது வேலைகளை முடித்து விட்டு அம்பிளாந்துறை வில்லுக்குள வீதியூடாக சென்று கொண்டு இருக்கும் போது அந்த நீர் நிரம்பிய குழியில் விழுந்துள்ளார்.

அங்கிருந்தவர்களால் காப்பாற்ப்பட்டு மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவ்வீதி பருவமழை காலத்தில் நீர் நிரம்புவதனால் இவ்வீயை பொது மக்கள் குறிப்பிட்ட காலங்களில் பாவனைக்கு உட்படுத்துவதில்லை எனவும் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரியின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மட்டக்களப்பு நீதிமன்ற நீதிவான் பீற்றர் போல் அவர்களின் உத்தரவிற்கமைவான சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரணவிசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்டதுடன் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தும் படி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

கொக்கட்டிச்சோலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-வ.சக்திவேல்-

Previous articleயாழ். போதனா வைத்தியசாலையில் அப்பாவை பார்க்க விடாததால் வாள்வெட்டு சம்பவத்தை மேற்கொண்ட மகன் !
Next articleயாழில் வடையின் விலையை கேட்டதும் வாயடைத்து போன பொதுமக்கள் !