நாட்டு மக்களுக்கு மருத்துவர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!

இலங்கையில் நிலவும் வெப்பமான காலநிலையுடன், சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற அறிகுறிகளை உள்ளடக்கிய காய்ச்சல் பரவும் என மருத்துவர்கள்  எச்சரித்துள்ளனர்.

இந்த நாட்களில் காய்ச்சல் பரவி வருவதாகவும், எனவே மக்கள் விழிப்புடன் இருக்குமாறும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நாட்களில் மக்கள், குறிப்பாக குழந்தைகள் நோய்வாய்ப்படுவதற்கு, வெப்பமான வானிலை மற்றும் பருவகால இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் காரணமாக இருக்கலாம் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சிறுவர்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடும்

மேலும், தற்போதைய வெப்பமான காலநிலையில் குழந்தைகள் நீரிழப்பு மற்றும் வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்படுவதைத் தடுக்க போதுமான கனிமங்களுடன் கூடிய திரவங்களை அதிக அளவில் வழங்குமாறு பொதுமக்களையும் பெற்றோர்களையும் மருத்துவர்கள் கேட்டுள்ளனர்.

இந்த வெப்பமான காலநிலையின் போது, குழந்தைகள் நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கவில்லை என்றால், அவர்களுக்கு வியர்வை கொப்புளங்கள் மற்றும் அரிக்கும் தோலழற்சி போன்ற தோல் நோய்கள் அதிகரிக்கக்கூடும் என சீமாட்டி ரிட்ஜ்வே மருத்துவமனையின் குழந்தை மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வயோதிபர்கள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், பொதுவான நோய்களைத் தடுக்கும் வகையில், நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு, மருத்துவர்கள் கோரியுள்ளனர்.

மேலும், டெங்கு மற்றும் இன்புளுவன்சா வைரஸ் பரவி வருவதால், 48 மணி நேரத்திற்கும் மேலாக காய்ச்சல் நீடித்தால், பொதுமக்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.