விவசாயிகளுக்கான நஷ்டஈடு வழங்கி வைப்பு!

விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் வட மாகாணத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ளனர்.

இதன் ஒருகட்டமாக கிளிநொச்சி மாவட்டத்திற்கு விஜயத்தினை மேற்கொண்ட அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் கிளிநொச்சி மாவட்டச்செயலகத்திற்கு விஜயம் செய்திருந்தனர்.

மாவட்டச்செயலகத்தில் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடிய அமைச்சர் அவர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் 2022 மற்றும் 2023 ஆண்டு காலப்பகுதிகளில் வறட்சி, வெள்ளம், காட்டுயானை தாக்கத்திற்கு உள்ளாகி பயிர் அழிவினை எதிர்கொண்ட விவசாயிகளுக்கான நட்டஈட்டிற்கான காசோலைகளை வழங்கிவைத்திருந்தார்.

2022, 2023 காலப்பகுதியில் 71,947 ஏக்கர் நிலப்பரப்பில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் வெள்ளம், வறட்சி, காட்டு யானைகளின் தாக்கத்தினால் 1,215 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டிருந்த பயிர்கள் அழிவடைந்திருந்தன. இவ் அழிவினை எதிர்கொண்ட 584 விவசாயிகளுக்கான நஷ்ட ஈடாக 1 கோடி 27 இலட்சத்து 85,473 ரூபாய் நிதியானது வழங்க ஏற்பாடாகியுள்ளது.

அந்தவகையில் குறிப்பிட்ட 16 விவசாயிகளுக்கான கொடுப்பனவு நிதிக்குரிய காசோலையினை அமைச்சர் சம்பிரதாயபூர்வமாக வழங்கிவைத்திருந்தார்.

மேலும் இந்நிகழ்வில் விவசாய ஊக்குவிப்புக்கென தெரிவு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள், விதைப்புக்கான பயறு, உழுந்து விதைகள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர், மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், விவசாய அமைச்சின் உயரதிகாரிகள், மாவட்ட விவசாயப்பணிப்பாளர், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளர், பயனாளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.