வேட்ப்பாளர் வைப்பு தொகையை அதிகரிக்க யோசனை!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வைப்புத் தொகையை அதிகரிப்பதற்காக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவினால் (Wijeyadasa Rajapakshe) முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தற்போதைய, பொருளாதார, சமூக, அரசியல் பின்னணிகளுக்கு ஏற்ப நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை தேர்தல்கள் சட்டம் ஆகியவற்றுக்கான தற்போதுள்ள வைப்புத்தொகை பண வரம்புகளை புதுப்பிப்பது தொடர்பில் அவர் குறித்த கோரி்க்கையை முன்வைத்திருந்தார்.

இதற்கமைய, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் வேட்பாளரின் வைப்புத்தொகை 2.6 மில்லியன் ரூபாவாகவும் சுயேச்சை வேட்பாளர்களின் வைப்புத்தொகை 3.1 மில்லியன் ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய நிதி நிர்ணயம்
மேலும், ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் அரசியல் கட்சிகளில் இருந்து போட்டியிட்டால், அவர் 2.6 மில்லியன் ரூபாவை செலுத்தவேண்டும். சுயேச்சை வேட்பாளர் ஒருவர் 3.1 மில்லியன் ரூபாவை செலுத்தவேண்டும்.

அதேநேரம், நாடாளுமன்ற தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளரின் வைப்புத்தொகை 11,000 ரூபாவாகவும், சுயேச்சைக் குழு வேட்பாளரின் வைப்புத்தொகை 16,000 ரூபாவாகவும் திருத்தப்படும்.

மாகாணசபைத் தேர்தலில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளரின் வைப்புத்தொகை 6,000 ரூபாவாகவும், சுயேச்சைக் குழுவின் வேட்பாளருக்கான வைப்புத்தொகை 11,000 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.