வாகன இறக்குமதி தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி!

பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள் மற்றும் விசேட தேவைகளுக்கு தேவையான லொறிகள் மற்றும் ட்ரக் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியின் கீழ் தடை காலப்பகுதியில் இறக்குமதி செய்யப்பட்டு சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்களை விடுவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

சுங்கப்பத்திரம் வழங்கப்படாத வாகனங்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு அறிவித்ததன் பின்னர் CIF பெறுமதியில் 30% வரி செலுத்தி விடுவிக்க முடியும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், பொது போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படும் பேருந்துகள், விசேட தேவைகளுக்காக மற்றும் பொருள் போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் லொறிகள் மற்றும் ட்ரக் வாகன இறக்குமதிக்கு (14) நள்ளிரவு முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்த நடவடிக்கை

இந்நிலையில், குப்பைகளை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் லொறிகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் போன்ற விசேட தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களும் இதன் கீழ் அனுமதிக்கப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதிப்பதன் மூலம் பயணிகள் போக்குவரத்து வசதிகளை வலுப்படுத்துவதுடன், சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கும் வழிவகுக்கும் என அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous articleமூன்று ஜனாதிபதி சட்டத்தரணிகள் நியமனம்
Next articleதிக்குவெல்லை  பிரதேசத்தில் நபர் ஒருவர் சுட்டுக் கொலை!